திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.2 திருப்பூந்தராய் (சீர்காழி)
பண் - காந்தாரபஞ்சமம்
பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்
வாயினாள்பனி மாமதி போல்முகத்
தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்துசேர்விடம் வானவ ரெத்திசை
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே.
1
காவியங்கருங் கண்ணி னாள்கனித்
தொண்டைவாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள்
தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே.
2
பையராவரும் அல்குல் மெல்லியல்
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ்
செய்யெலாங்கழு நீர்கமலம் மலர்த்
தேறலூறலின் சேறுல ராதநற்
பொய்யிலாமறை யோர்பயில்பூந்தராய் போற்றுதுமே.
3
முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்புதேன்கொள் குரம்பைமூ வாமருந்
துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை
வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்
மேவினார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளினந்துயில் மல்கியபூந்தராய் போற்றுதுமே.
4
பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர்
தோனையேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார்
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு
நீலமல்கிய காமரு வாவிநற்
புண்ணியருறை யும்பதிபூந்தராய் போற்றுதுமே.
5
வாணிலாமதி போலநுத லாள்மட
மாழையொண்கணாள் வண்தர ளந்நகை
பாணிலாவிய இன்னிசையார்மொழிப் பாவையொடுஞ்
சேணிலாத்திகழ் செஞ்சடையெம்மண்ணல்
சேர்வதுசிக ரப்பெருங் கோயில்சூழ்
போணிலாநுழை யும்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.
6
காருலாவிய வார்குழ லாள்கயற்
கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னி யன்மன்னி
நிகருநாமம்முந் நான்கு நிகழ்பதி
போருலாவெயில் சூழ்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.
7
காசைசேர்குழ லாள்கய லேர்தடங்
கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலைத்
தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகலத்
தீசன்மேவும் இருங்கயி லையெடுத்
தானைஅன்றடர்த் தான்இணைச் சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.
8
கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
கொவ்வைவாய்க் கொடியேரிடை யாளுமை
பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய்
மங்குல்வண்ணனும் மாமல ரோனும்
மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்குநீரின் மிதந்தநற்பூந்தராய் போற்றுதுமே.
9
கலவமாமயி லார்இய லாள்கரும்
பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற்
குலவுபூங்குழ லாளுமைகூறனை வேறுரையால்
அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள்
ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற்
புலவர்தாம்புகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமே.
10
தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
கண்ணியோடண்ணல் சேர்விடந் தேன்அமர்
பூம்பொழில்திகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமென்
றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.3 திருப்புகலி (சீர்காழி) - நாலடிமேல் வைப்பு
பண் - காந்தாரபஞ்சமம்
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்
புயலன மிடறுடைப் புண்ணியனே
கயலன அரிநெடுங் கண்ணியொடும்
அயலுல கடிதொழ அமர்ந்தவனே
கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.
1
நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்தோல்
அலைவரு மதகரி யுரித்தவனே
இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.
2
பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே.
3
நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
முழவொடும் அருநட முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே.
4
கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
பெருமையை நிலத்தவர் பேசினல்லால்
அருமையில் அளப்பரி தாளவனே
அரவோரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே.
5
அடையரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.
6
அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகலல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே.
7
இரவொடு பகலதாம் எம்மானுன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.
8
உருகிட வுவகைதந் துடலினுள்ளால்
படுகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனனும் பூவுளானும்
பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய்
உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே.
9
கையினி லுண்பவர் கணிகைநோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவ ருரைகளைப் பொருளெனாத
மெய்யவ ரடிதொழ விரும்பினனே
வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.
10
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவ ரடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.5 திருப்பூந்தராய் (சீர்காழி) - ஈரடிமேல் வைப்பு
பண் - காந்தாரபஞ்சமம்
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன்தானே.
1
புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
மூல மாய முதல்வன்தானே.
2
வேந்த ராயுல காள விருப்புறிற்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்
சாதி யாவினை யானதானே.
3
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்மிறையே.
4
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்திய ராகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் ஈசன்தானே.
5
பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.
6
புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவ மாயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன்தானே.
7
போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே.
8
மத்த மான இருவர் மருவொணா
அத்த னானவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந்தானே.
9
பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந்
திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்மிறையே.
10
புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும்
பந்த மார்வினை பாறிடுமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.7 திருப்புகலி (சீர்காழி)
பண் - காந்தாரபஞ்சமம்
கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.
1
சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்க்
காம்பன தோளியோ டும்மிருந் தகட வுளன்றே.
2
கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
விருப்பின்நல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
3
அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லன்னிடைப்
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.
4
சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும்
பூமல்கு தண்பொழில் மன்னுமந் தண்புக லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.
5
இரவிடை யொள்ளெளி யாடினா னும்மிமை யோர்தொழச்
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தஅழ கனன்றே.
6
சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.
7
கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர்
அன்னமன் னநடை மங்கையொ டுமமர்ந் தானன்றே.
8
பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்
புன்னைபொன் தாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
9
பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.
10
பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.13 திருப்பூந்தராய் (சீர்காழி)
பண் - காந்தாரபஞ்சமம்
மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை அரிவை பங்கரே.
1
மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிமலர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.
2
தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.
3
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.
4
வெள்ளெயி றுடையவ்வ விரவ லார்களூர்
ஒள்ளெளி யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.
5
துங்கியல் தானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி அரிவை பங்கரே.
6
அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தரக்
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.
7
மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.
8
தாமுக மாக்கிய அசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமகன் அறிகிலாப் பூந்தராய் நகர்க்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே.
9
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்
புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.
10
புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.24 திருக்கழுமலம் (சீர்காழி)
பண் - கொல்லி
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
1
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
2
தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.
3
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.
4
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
5
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.
6
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.
7
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.
8
நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி யாவழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
9
தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.
10
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.37 திருப்பிரமபுரம் (சீர்காழி)
பண் - கொல்லி
கரமுனம்மல ராற்புனல்மலர்
    தூவியேகலந் தேத்துமின்
    பரமனூர்பல பேரினாற்பொலி
    பத்தர்சித்தர்கள் தாம்பயில்
    வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
    ஐயன்நாடொறும் மேயசீர்ப்
    பிரமனூர்பிர மாபுரத்துறை
    பிஞ்ஞகனருள் பேணியே.
1
விண்ணிலார்மதி சூடினான்விரும்
    பும்மறையவன் தன்றலை
    உண்ணநன்பலி பேணினான்உல
    கத்துளூனுயி ரான்மலைப்
    பெண்ணினார்திரு மேனியான்பிர
    மாபுரத்துறை கோயிலுள்
    அண்ணலாரரு ளாளனாயமர்
    கின்றஎம்முடை யாதியே.
2
எல்லையில்புக ழாளனும்இமை
    யோர்கணத்துடன் கூடியும்
    பல்லையார்தலை யிற்பலியது
    கொண்டுகந்த படிறனுந்
    தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்
    தூமலர்சொரிந் தேத்தவே
    மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
    மாபுரத்துறை மைந்தனே.
3
அடையலார்புரஞ் சீறியந்தணர்
    ஏத்தமாமட மாதொடும்
    பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
    மாபுரத்துறை கோயிலான்
    தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
    லேபரவிநின் றேத்தினால்
    இடையிலார்சிவ லோகமெய்துதற்
    கீதுகாரணங் காண்மினே.
4
வாயிடைம்மறை யோதிமங்கையர்
    வந்திடப்பலி கொண்டுபோய்ப்
    போயிடம்எரி கானிடைப்புரி
    நாடகம்இனி தாடினான்
    பேயொடுங்குடி வாழ்வினான்பிர
    மாபுரத்துறை பிஞ்ஞகன்
    தாயிடைப்பொருள் தந்தையாகுமென்
    றோதுவார்க்கருள் தன்மையே.
5
ஊடினாலினி யாவதென்னுயர்
    நெஞ்சமேயுறு வல்வினைக்
    கோடிநீயுழல் கின்றதென்னழ
    லன்றுதன்கையி லேந்தினான்
    பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
    மாபுரத்துறை வேதியன்
    ஏடுநேர்மதி யோடராவணி
    எந்தையென்றுநின் றேத்திடே.
6
செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில
    ரென்றும்ஏத்தி நினைந்திட
    ஐயன்ஆண்டகை அந்தணன்அரு
    மாமறைப்பொரு ளாயினான்
    பெய்யும்மாமழை யானவன்பிர
    மாபுரம்இடம் பேணிய
    வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்
    தேத்துமின்வினை வீடவே.
7
கன்றொருக்கையில் ஏந்திநல்விள
    வின்கனிபட நூறியுஞ்
    சென்றொருக்கிய மாமறைப்பொருள்
    தேர்ந்தசெம்மல ரோனுமாய்
    அன்றரக்கனைச் செற்றவன்அடி
    யும்முடியவை காண்கிலார்
    பின்றருக்கிய தண்பொழிற்பிர
    மாபுரத்தரன் பெற்றியே.
8
உண்டுடுக்கைவிட் டார்களும்உயர்
    கஞ்சிமண்டைகொள் தேரரும்
    பண்டடக்குசொற் பேசுமப்பரி
    வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்
    தண்டொடக்குவன் சூலமுந்தழல்
    மாமழுப்படை தன்கையிற்
    கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர
    மாபுரத்துறை கூத்தனே.
9
பித்தனைப்பிர மாபுரத்துறை
    பிஞ்ஞகன்கழல் பேணியே
    மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
    செய்துநன்பொருள் மேவிட
    வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
    வாய்நவின்றெழு மாலைகள்
    பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
    போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே.
10
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.43 சீர்காழி
பண் - கௌசிகம்
சந்த மார்முலை யாள்தன கூறனார்
வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.
1
மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்
தேனி டங்கொளுங் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே.
2
மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்
ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே.
3
புற்றின் நாகமும் பூளையும் வன்னியுங்
கற்றை வார்சடை வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுடன் ஏத்தி யுணருமே.
4
நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.
5
பெண்ணொர் கூறினர் பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாய அடிகள் சரிதையே.
6
பற்று மானும் மழுவும் அழகுற
முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்றம் ஏற துகந்தார் பெருமையே.
7
எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுள்
கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.
8
காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலு நான்முகன் தானும் வனப்புற
ஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.
9
உருவ நீத்தவர் தாமும் உறுதுவர்
தருவ லாடையி னாருந் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேயடைந் துய்ம்மினே.
10
கானல் வந்துல வுங்கடற் காழியுள்
ஈன மில்லி இணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.56 திருப்பிரமபுரம் (சீர்காழி)
பண் - பஞ்சமம்
இறையவன் ஈசன்எந்தை இமையோர்தொழு தேத்தநின்ற
கறையணி கண்டன்வெண்தோ டணிகாதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடும் மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே.
1
சடையினன் சாமவேதன் சரிகோவண வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ லுடையான்மறை மல்கலைநூல்
உடையவன் ஊனமில்லி யுடனாயுமை நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிரமாபுரம் பேணுமினே.
2
மாணியை நாடுகாலன் உயிர்மாய்தரச் செற்றுக்காளி
காணிய ஆடல்கொண்டான் கலந்தூர்வழிச் சென்றுபிச்சை
ஊணியல் பாகக்கொண்டங் குடனேயுமை நங்கையொடும்
பேணிய கோயில்மன்னும் பிரமாபுரம் பேணுமினே.
3
பாரிடம் விண்ணுமெங்கும் பயில்நஞ்சு பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் பெருமானிது காவெனலும்
ஓரிடத்தே கரந்தங் குமைநங்கையொ டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிரமாபுரம் பேணுமினே.
4
நச்சர வச்சடைமேல் நளிர்திங்களு மொன்றவைத்தங்
கச்சமெ ழவிடைமேல் அழகார்மழு வேந்திநல்ல
இச்சை பகர்ந்துமிக இடுமின்பலி யென்றுநாளும்
பிச்சைகொள் அண்ணல்நண்ணும் பிரமாபுரம் பேணுமினே.
5
பெற்றவன் முப்புரங்கள் பிழையாவண்ணம் வாளியினாற்
செற்றவன் செஞ்சடையில் திகழ்கங்கைத னைத்தரித்திட்
டொற்றை விடையினனாய் உமைநங்கையொ டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.
6
வேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்
பேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே.
7
இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் அடர்த்தும்மலை அன்றெடுப்பக்
குமையது செய்துபாடக் கொற்றவாளொடு நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான் பிரமாபுரம் உன்னுமினே.
8
ஞாலம் அளித்தவனும் அரியும்மடி யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டிலாமையி னாற்கதறி
ஓல மிடஅருளி உமைநங்கையொ டும்முடனாய்
ஏல இருந்தபிரான் பிரமாபுரம் ஏத்துமினே.
9
துவருறும் ஆடையினார் தொக்கபீலியர் நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண் டணுகேன்மின் னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழிகாலமெல் லாம்படைத்த
இவரவர் என்றிறைஞ்சிப் பிரமாபுரம் ஏத்துமினே.
10
உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்தவொண் மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல அணிசம்பந்தன் பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.67 திருப்பிரமபுரம் (சீர்காழி) - வழிமொழித்திருவிராகம்
பண் - சாதாரி
சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம்
    முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
    கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
    வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை
    பரவவளர் பிரமபுரமே.
1
தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர்
    பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீளநயனி கோணில்பிடி
    மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொள்
    மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி
    காணநடு வேணுபுரமே.
2
பகலொளிசெய் நகமணியை முகைமலரை
    நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய்
    முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை
    மிகஅருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிக
    ழலர்பெருகு புகலிநகரே.
3
அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர
    வங்களெழில் தங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிகர்
    எங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர்
    பொங்கெரி புலன்கள்களைவோர்
வெங்குரவி ளங்கியுமை பங்கர்சர
    ணங்கள்பணி வெங்குருவதே.
4
ஆணியல்பு காணவன வாணவியல்
    பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
    பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருள் மாணுபிர
    மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி
    தோணிநிகர் தோணிபுரமே.
5
நிராமய பராபர புராதன
    பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை
    புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர
    பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு
    தராய்மொழி விராயபதியே.
6
அரணையுறு முரணர்பலர் மரணம்வர
    விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர்
    பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவிடல் புரளமுறு
    மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு
    கிரகமமர் சிரபுரமதே.
7
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன்
    விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற
    னுறஅருளும் இறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்
    நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்
    பெறவருளு புறவமதுவே.
8
விண்பயில மண்பகிரி வண்பிரமன்
    எண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள்
    தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர்
    புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
    பண்புகளை சண்பைநகரே.
9
பாழியுறை வேழநிகர் பாழமணர்
    சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள்
    வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு
    சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில்
    ஊழிவளர் காழிநகரே.
10
நச்சரவு கச்செனவ சைச்சுமதி
    யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு
    பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி
    யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள்
    நச்சிமிடை கொச்சைநகரே.
11
ஒழுகலரி தழிகலியில் உழியுலகு
    பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
    குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
    கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
    வழிமொழிகள் மொழிதகையவே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.75 திருச்சண்பைநகர் (சீர்காழி) - திருவிராகம்
பண் - சாதாரி
எந்தமது சிந்தைபிரி யாதபெரு
    மானெனஇ றைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு
    தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள்
    செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு
    மேவுபதி சண்பைநகரே.
1
அங்கம்விரி துத்தியர வாமைவிர
    வாரமமர் மார்பிலழகன்
பங்கயமு கத்தரிவை யோடுபிரி
    யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ
    ளத்திரள்பொ லிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி
    றங்கொளிகொள் சண்பைநகரே.
2
போழுமதி தாழுநதி பொங்கரவு
    தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
    மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை
    துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென
    உந்துதகு சண்பைநகரே.
3
கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்
    கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி
    பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது
    வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர்
    தத்தைபயில் சண்பைநகரே.
4
பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி
    யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை
    யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில்
    நீடுவிரை யார்புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில்
    அன்னம்வளர் சண்பைநகரே.
5
பாலனுயிர் மேலணவு காலனுயிர்
    பாறவுதை செய்தபரமன்
ஆலமயில் போலியலி ஆயிழைத
    னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர்
    கெண்டிநற வுண்டிசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள
    நீலம்வளர் சண்பைநகரே.
6
விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி
    னும்விளைவு தான்மிகவுடை
மண்பொய்அத னால்வளமி லாதொழியி
    னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல
    தோறும்நிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழுமடி
    யார்தமது தன்மையதுவே.
7
வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு
    வித்தமதி யில்வலியுடை
யரக்கனது ரக்கரசி ரத்துறவ
    டர்த்தருள் புரிந்தஅழகன்
இருக்கயைத ருக்கன்முத லானஇமை
    யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்
    கொண்டலன சண்பைநகரே.
8
நீலவரை போலநிகழ் கேழலுரு
    நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர்
    தீயுருவ மானவரதன்
சேலும்இன வேலும்அன கண்ணியொடு
    நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு
    கிள்ளைபயில் சண்பைநகரே.
9
போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு
    வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை
    நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை ஆளுடைய அரிவையொடு
    பிரிவிலி அமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல்
    புகஎறிகொள் சண்பைநகரே.
10
வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு
    சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு
    ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்
    ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்
    சேர்வர்சிவ லோகநெறியே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.81 திருத்தோணிபுரம் (சீர்காழி) - திருவிராகம்
பண் - சாதாரி
சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி
அங்கமுடல் மேலுறவ ணிந்துபிணி தீரஅருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே.
1
சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாலையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.
2
வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலில் நஞ்சமமு துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.
3
கொல்லைவிடை யேறுடைய கோவணவன் நாவணவு மாலை
ஒல்லையுடை யான்அடைய லார்அரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே.
4
தேயுமதி யஞ்சடை யிலங்கிட விலங்கல்மலி கானிற்
காயுமடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன் நினைப்பார்
தாயெனநி றைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே.
5
பற்றலர்தம் முப்புரம் எரித்தடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம தொழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்
பற்றவன் இசைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்
துற்றசடை அத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே.
6
பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசும்அடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தலுடை யானூர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே.
7
தென்றிசை யிலங்கையரை யன்திசைகள் வீரம்விளை வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தக னிடஞ்சீர்
ஒன்றிசை யியற்கிளவி பாடமயி லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுர மாமே.
8
நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி
ஆற்றலத னால்மிக வளப்பரிய வண்ணம்எரி யாகி
ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவுதோணிபுர மாமே.
9
மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டும்அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழி கெடுத்தடை வினானக்
காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற்
தோடுகுழை பெய்தவர் தமக்குறைவுதோணிபுர மாமே.
10
துஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
மஞ்சனை வணங்குதிரு ஞானசம் பந்தன்சொன் மாலை
தஞ்சமென நின்றிசை மொழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்றுவளர் வாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.84 திருப்புறவம் (சீர்காழி) - திருவிராகம்
பண் - சாதாரி
பெண்ணிய லுரவினர் பெருகிய புனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.
1
கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமொர் அரவமு மலரரை மிசையினிற்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குட னுறைவது புகதுமலர் விரைகமழ் புறவமே.
2
கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொரு
பங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவா உறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.
3
மாதவ முடைமறை யவனுயிர் கொளவரும் மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவரு
போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே.
4
காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.
5
சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவிணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதி
புன்ணையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே.
6
வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரு முரவினர் இமையவர் தொழுவதோ ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துபைதி புறவமே.
7
வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே.
8
தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.
9
கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே.
10
போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.89 திருக்கொச்சைவயம் (சீர்காழி)
பண் - சாதாரி
திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமை குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
1
ஏலமார் இலவமோ டினமலர்த் தொகுதியா யெங்கும்நுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே அஞ்சல்நீயே.
2
பொன்னுமா மணிகொழித் தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக்
கன்னிமார் முலைநலம் கவரவந் தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவில்நாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகாண் நெஞ்சமே அஞ்சல்நீயே.
3
கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடிநினைந் துய்யலாம் நெஞ்சமே அஞ்சல்நீயே.
4
மறைகொளுந் திறலினார் ஆகுதிப் புகைகள்வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணி செழுமதி திகழ்மதிற் கொச்சைதன்பால்
உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.
5
சுற்றமும் மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா உள்கினானோர்
குற்றமில் லடியவர் குபமிய வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும்நெஞ்சே.
6
கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ அஞ்சல்நெஞ்சே.
7
அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார் உறைவிடம் ஒளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமுந் தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே.
8
அரவினிற் றுயில்தரும் அரியும்நற் பிரமனும் அன்றயர்ந்து
குரைகழற் றிருமுடி யளவிட அரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.
9
கடுமலி யுடலுடை அமணருங் கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை இகழ்பவர் கருதுநம் ஈசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.
10
காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென இருந்தநல் லடிகளை ஆதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழில்மறை ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லர்வா னுலகின்மேலே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.94 திருவெங்குரு (சீர்காழி) - திருமுக்கால்
பண் - சாதாரி
விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே.
1
வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே
ஆதிய அருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே.
2
விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள உறுபிணி யிலரே.
3
விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்கள் துயர்பிணி யிலரே.
4
மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொ டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
தக்கவர் உறுவது தவமே.
5
வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.
6
விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழல்மல்கும் அங்கையி னீரே
அழல்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே.
7
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே.
8
மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீலே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே.
9
விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே.
10
இப்பதிகத்தில் பதினொன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.100 திருத்தோணிபுரம் (சீர்காழி)
பண் - சாதாரி
கரும்பமர் வில்லியைக் காய்ந்துகாதற் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதாற்
பெரும்பக லேவந்தென் பெண்மைகொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
1
கொங்கியல் பூங்குழற் கொவ்வைச்செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
2
மத்தக் களிற்றுரி போர்க்கக்கண்டு மாதுமை பேதுறலுஞ்
சித்தந் தெளியநின் றாடியேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங்கொண்ட ஒருவர்க் கிடம்போலுந்
துத்தநல் லின்னிசை வண்டுபாடுந் தோணி புரந்தானே.
3
இப்பதிகத்தில் நான்காம் செய்யுள் மறைந்து போயிற்று.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் மறைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் மறைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
7
வள்ள லிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத்தோன் உரம்நெரிய
மெள்ள விரல்வைத்தென் உள்ளங்கொண்டார் மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணி புரந்தானே.
8
வெல்பற வைக்கொடி மாலும்மற்றை விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்பணிந்துஞ்
செல்வற நீண்டெஞ் சிந்தைகொண்ட செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்குசெம்மைத் தோணி புரந்தானே.
9
குண்டிகை பீலிதட் டோடுநின்று கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தென் எழில்கவர்ந் தாரிடமாந்
தொண்டிசை பாடல றாததொன்மைத் தோணி புரந்தானே.
10
தூமரு மாளிகை மாடம்நீடு தோணிபுரத் திறையை
மாமறை நான்கினொ டங்கமாறும் வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம் பந்தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும்வல்லார் பார்முழு தாள்பவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.110 திருப்பிரமபுரம் (சீர்காழி) - ஈரடி
பண் - பழம்பஞ்சுரம்
வரம தேளொளா உரம தேசெயும்
புரமெ ரித்தவன் பிரம நற்புரத்
தரன்நல் நாமமே பரவு வார்கள்சீர்
விரவு நீள்புவியே.
1
சேணு லாமதில் வேணு மண்ணுளோர்
காண மன்றலார் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணு கின்றவ
ராணி யொத்தவரே.
2
அகல மார்தரைப் புகலும் நான்மறைக்
கிகலி யோர்கள்வாழ் புகலி மாநகர்ப்
பகல்செய் வோனெதிர்ச் சகல சேகரன்
அகில நாயகனே.
3
துங்க மாகரி பங்க மாவடுஞ்
செங்கை யானிகழ் வெங்கு ருத்திகழ்
அங்க ணானடி தங்கை யாற்றொழத்
தங்கு மோவினையே.
4
காணி யொண்பொருட் கற்ற வர்க்கீகை
யுடைமை யோரவர் காதல் செய்யுநற்
றோணி வண்புரத் தாணி யென்பவர்
தூமதி யினரே.
5
ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப்
பூந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற்
சேர்ந்தி ராவினையே.
6
சுரபு ரத்தினைத் துயர்செய் தாருகன்
துஞ்ச வெஞ்சினக் காளி யைத்தருஞ்
சிரபு ரத்துளா னென்ன வல்லவர்
சித்தி பெற்றவரே.
7
உறவு மாகியற் றவர்க ளுக்குமா
நெதிகொ டுத்துநீள் புவியி லங்குசீர்ப்
புறவ மாநகர்க் கிறைவ னேயெனத்
தெறகி லாவினையே.
8
பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன்
முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
சண்பை யாதியைத் தொழும வர்களைச்
சாதியா வினையே.
9
ஆழி யங்கையிற் கொண்ட மாலயன்
அறிவொ ணாததோர் வடிவு கொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே
கற்றல் நற்றவமே.
10
விச்சை யொன்றிலாச் சமணர் சாக்கியப்
பிச்சர் தங்களைக் கரிச றுத்தவன்
கொச்சை மாநகர்க் கன்பு செய்பவர்
குணங்கள் கூறுமினே.
11
கழும லத்தினுட் கடவுள் பாதமே
கருது ஞானசம் பந்த னின்றமிழ்
முழுதும் வல்லவர்க் கின்ப மேதரும்
முக்கண் எம்மிறையே.
12
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.113 திருக்கழுமலம் (சீர்காழி) - திருஇயமகம்
பண் - பழம்பஞ்சுரம்
உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.
1
சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.
2
காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்தன் உடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.
3
மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குரவே.
4
உடன்பயில் கின்றனன் மாதவனே யுறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே
படங்கொள் அரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.
5
திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழில் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்கத ராயுறை சுந்தரரே.
6
ஓர்வரு கண்கள் இணைக்கயலே உமையவர் கண்கள் இணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொ ளுதாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே.
7
ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையே
பூண்டனர் சேரலு மாமதியே புறவம் அமர்ந்த வுமாபதியே.
8
நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்ட கருங்களனே
மன்னி வரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.
9
இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரும் இராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.
10
கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.
11
பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே
கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.
12
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.117 சீர்காழி - திருமாலைமாற்று
பண் - கௌசிகம்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழியா மாமாயாநீ மாமாயா.
1
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரத ராயாதா காயாகாழீ யாகாயா.
2
தாவாமூவா தாசாகா ழிநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
3
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழியாகாயா வாவாநீ.
4
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழிகாயாமே லாகாயா.
5
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
6
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
7
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
8
காலேமேலே காணீகா ழிகாலேமே லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
9
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
10
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.118 திருக்கழுமலம் (சீர்காழி)
பண் - புறநீர்மை
மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியும் மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொலி பரந்த வெண்டிரை முத்தம் இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோதம் மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.
1
மின்னிய அரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் தேவர்தம் பெருமான் சேயிழை யொடும்உறை விடமாம்
பொன்னியன் மணியும் முரிகரி மருப்புஞ் சந்தமும் உந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.
2
சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடுதூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகரென லாமே.
3
மண்ணினா ரேத்த வானுலார் பரச அந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கார் இயல்பினா னிறைந்தார் ஏந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே.
4
சுருதியான் றலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
பருதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையும் அங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.
5
புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைகள் ஒன்றோடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே.
6
அலைபுனற் கங்கை தங்கிய சடையார் அடல்நெடு மதிலொரு மூன்றுங்
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே.
7
ஒருக்கமுன் நினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றலன் றழித்த அழகனார் அமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமா றரியா வண்மையல் வாழுங் கழுமல நகரென லாமே.
8
அருவரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரியுரு வான இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.
9
உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும் அத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்து புன்மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.
10
கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com